Loading Now

தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக வழக்கறிஞர் செஞ்சி கே. கதிரவன், துணைத் தலைவராக வழக்கறிஞர் இ. பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக வழக்கறிஞர் பி.எஸ். அமல்ராஜ் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் மொத்தம் 25 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில் 2 நியமன பெண் உறுப்பினர்கள் தவிர, 23 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் 30-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர். முன்வரிசை வாக்குகளின் அடிப்படையில் 23 பேர் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம். வேலுமணி மற்றும் உயர் நீதிமன்ற சமரச தீர்வு மைய பயிற்சியாளரும் வழக்கறிஞருமான சுதர்ஷனா சுந்தர் ஆகிய இருவரும் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான புதிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் செஞ்சி கே. கதிரவன், துணைத் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் இ. பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் பி.எஸ். அமல்ராஜ் ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், மூவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் அசோக்குமார் பாண்டே ஆகியோர், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

பின்னர் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பார் கவுன்சில் நிர்வாகிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

Share this content:

Post Comment

You May Have Missed