மயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம்!
துலா உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் – 16ஆம் தேதி கடைமுக தீர்த்தவாரி
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற துலா உற்சவத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் உற்சவத் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் விநாயகர் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி தங்களது பாவச் சுமைகளைப் போக்கிக் கொள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு சிவாலயங்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஐப்பசி முதல் தேதி முதல் காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவாலயங்களின் உற்சவத் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் மயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வரும் 7ஆம் தேதி பெரிய கொடியேற்றம் நடைபெற உள்ளது. பத்து நாள் உற்சவத்தில் மயிலம்மன் பூஜை, திருக்கல்யாணம், திருத்தேர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதன் முக்கிய நிகழ்வாக வரும் 16ஆம் தேதி புகழ்பெற்ற கடைமுக தீர்த்தவாரியும், 17ஆம் தேதி இறைவன் முடவனுக்கு காட்சி தந்ததை நினைவுகூரும் முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளன.
துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகின்றனர்.



Post Comment