மதுரை அருகே கோர விபத்து: ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம், ராஜ மேரி, ரஞ்சனா உள்ளிட்ட ஆறு பேர் ஒரே காரில் கோவில்பட்டியில் நடைபெற்ற குடும்ப விசேஷம் ஒன்றில் பங்கேற்கச் சென்று, பின்னர் சென்னை நோக்கி திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை மேலூர் அருகே தும்பைப்பட்டி மேம்பாலத்தில் கார் வந்தபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே அமைந்திருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர் திசைக்குள் புகுந்தது. அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியதில், இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்து நொறுங்கின.
இந்த விபத்தில் காரை ஓட்டிய ஸ்ரீராம், ராஜ மேரி, ரஞ்சனா, ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு கார் ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் காயமடைந்தனர்.
தகவலறிந்த மேலூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிடத்தக்கது: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலூர் அருகே மீண்டும் ஏற்பட்ட இந்த விபத்திலும் 5 பேர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post Comment