Loading Now
புதுச்சேரி அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்: தகுதி ஓட்டத்தில் மயங்கிய இளைஞர் உயிரிழப்பு

புதுச்சேரி அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்: தகுதி ஓட்டத்தில் மயங்கிய இளைஞர் உயிரிழப்பு

இந்திய ராணுவத்தின் சென்னை ஆட்சேர்ப்பு மண்டல தலைமையகம், புதுச்சேரி அரசின் ஒத்துழைப்புடன் அக்னிவீர் அனைத்து பிரிவு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாமை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று அதிகாலை தொடங்கியது.

இந்த ஆட்சேர்ப்பு பணியில் 120-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களையும், புதுச்சேரியையும் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் முன்தினமே புதுச்சேரி வந்தடைந்தனர். நேற்று அதிகாலை முதல் கல்விச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு உடல் தகுதித் தேர்வு தொடங்கியது.

முதற்கட்டமாக 1.6 கிலோமீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களுக்கு 10 புல்-அப், 9 அடி பள்ளம் தாண்டுதல், சமநிலை நடை மற்றும் உடல் அளவீட்டு தேர்வுகள் நடைபெற்றன. அனைத்து கட்டங்களிலும் தேர்ச்சி பெறுவோருக்கு ராணுவ மருத்துவக் குழுவினரால் உடல்நலம் மற்றும் கண்பார்வை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் தினமும் சுமார் 1,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று 800-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களின் வசதிக்காக புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்காக புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து இலவச பேருந்து சேவையும் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் புதுச்சேரி போலீஸார் ஈடுபட்டனர்.

தகுதி ஓட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

ஆட்சேர்ப்பு முகாமில் சோக சம்பவமும் அரங்கேறியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (20) என்பவர் 1.6 கிலோமீட்டர் தகுதி ஓட்டத்தில் பங்கேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this content:

You May Have Missed