Loading Now
×

ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு குறைப்பு: ஆசிரியர்கள் அதிர்ச்சி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

சென்னை: ஓய்வூதியம் மற்றும் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தமிழக நிதியமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.15,997.05 கோடியிலிருந்து ரூ.4,997.05 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.11,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதியில் ரூ.3,000 கோடியும், பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.4,007 கோடியும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ் தலைமையிலான குழுவின் பரிந்துரையைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு கடன் வாங்க அனுமதித்தால் மட்டுமே டிஏபிஎஸ் திட்டத்தை அமல்படுத்த முடியும் எனக் கூறி அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சிப்பதாகவும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசை விமர்சித்துக்கொண்டே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை வஞ்சிப்பது ஏற்புடையதல்ல என்றும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அரசாங்கத்தையும் வலுவான போராட்டங்களின் மூலம் மாற்றக்கூடிய வல்லமை ஊழியர்களுக்கு உள்ளது என்பதை அரசு உணர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, நிதியமைச்சரின் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இடைக்கால நிவாரணமாக ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியை தாமதமின்றி உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், முதுகலை ஆசிரியர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளை சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this content:

You May Have Missed