Loading Now

அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 10 கலைக் கல்லூரிகளில் 4 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன: சேகர்பாபு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, 10 கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 4 கல்லூரிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டதாக முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அந்த 4 கலைக் கல்லூரிகளில் 2 கல்லூரிகளுக்கு தடை ஆணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் அரசு தரப்பில் முறையாக வாதங்கள் முன்வைக்கப்பட்டு, 4 கல்லூரிகளின் பணிகளுக்கும் தடை இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று கல்லூரி பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கும் வழக்கு சென்றதாகவும், அங்கும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் சேகர்பாபு தெரிவித்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் அடிப்படையில் கல்லூரிகள் கட்டப்படுவது ஏற்புடையது எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கல்லூரிகளை கட்டலாம் என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக சேகர்பாபு கூறினார்.

மேலும், அறிவிக்கப்பட்ட 4 கல்லூரிகளில் 2 கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருவதாகவும், அந்த இரு கல்லூரிகளும் தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வருவதால், அவற்றுக்கு சொந்த கட்டிடங்களை கட்ட அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகள், 50 ஆண்டுகளில் செய்து இருக்க வேண்டிய பணிகள்” என்று குறிப்பிட்ட சேகர்பாபு, தன் மீது தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உரிய ஆதாரங்களுடன் சட்டபூர்வமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அதற்கு உரிய பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

“சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இல்லாததை, பொல்லாததை, வாய்க்கு வந்ததை பேசுவது நாகரிகம் அற்றது” என்றும் அவர் விமர்சித்தார்.

2021ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட 10 கலைக் கல்லூரிகளில் 4 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 கலைக் கல்லூரிகளையும் தவெக அரசு கட்ட வேண்டும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

Share this content:

Post Comment

You May Have Missed