விதிமுறைகளை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை
சென்னை: விதிமுறைகளை மீறி செயல்படும் பார்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் பார் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பார்களின் உரிமம், சட்ட விதிமுறைகள், அரசு நிர்ணயித்த செயல்பாட்டு நேரம், லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காவல் ஆணையர் விரிவாக அறிவுரைகளை வழங்கினார்.
உரிமம் மற்றும் பிற சான்றிதழ்களைப் பெறுவதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர, எந்தவொரு அதிகாரிக்கும் கூடுதல் தொகை அல்லது லஞ்சம் வழங்க வேண்டிய அவசியமில்லை என காவல் ஆணையர் அறிவுறுத்தியதாக பார் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால், உடனடியாக உரிய முறையில் புகார் அளிக்கலாம் என்றும் காவல் ஆணையர் அறிவுறுத்தியதாக அவர்கள் கூறினர்.
அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே பார்கள் செயல்பட வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகு மதுபானம் விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் காவல் ஆணையர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
விதிமுறைகளை மீறி செயல்படும் பார்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீதும், அவர்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Post Comment