சென்னை வாடகை வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.2.11 கோடி மோசடி – பெண் உள்பட இருவர் கைது
சென்னை: இணையதளம் மூலம் போலி நிறுவனம் பெயரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, அவற்றை வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டு ரூ.2.11 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
‘இமயம் ஹோம்ஸ்’ என்ற பெயரில் விளம்பரம் செய்து, வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து 34 வீடுகளை வாடகைக்கு எடுத்த ஹெலன் ரோஸ் (59), பிரேம்குமார் (50) ஆகியோர், அந்த வீடுகளை மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் பாத்திமா பீவி என்பவரிடம் ரூ.7 லட்சம் பெற்று வீட்டை குத்தகைக்கு வழங்கியுள்ளனர். ஆனால், வீட்டின் உண்மையான உரிமையாளருக்கு வாடகை செலுத்தாததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாத்திமா பீவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், 34 வீடுகளின் மூலம் ரொக்கம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனையாக சுமார் ரூ.2.11 கோடி வசூலித்தது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த திருவேற்காட்டைச் சேர்ந்த ஹெலன் ரோஸ் மற்றும் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, முக்கிய குத்தகை மற்றும் வாடகை ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
போலி நிறுவனம் நடத்தி வீடுகளை குத்தகைக்கு விட்ட இந்த மோசடி சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Post Comment