Loading Now

Breaking

மேகமலை மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி ஆண்டிபட்டி அருகே முழு கடையடைப்பு; அரசாணையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

image-20-1024x769 மேகமலை மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி ஆண்டிபட்டி அருகே முழு கடையடைப்பு; அரசாணையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு, மேகமலை, வண்டியூர், காந்திகிராமம், வாலிப்பாறை, கோரையூத்து, அரண்மனைபுதூர், நரியூத்து உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்கள் பல தலைமுறைகளாக வசித்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கவும் வலியுறுத்தி, கடமலை மயிலை ஒன்றியத்தில் நேற்று ஒருநாள் முழு கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக மலை மற்றும் காடு சார்ந்த விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலை பகுதிகளை ஒருங்கிணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசித்து வந்த குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மேகமலையில் இயங்கி வந்த பல தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மலைவாழ் மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரமும், நிரந்தர குடியிருப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடமலைக்குண்டு கிராம நலக் கமிட்டி தலைவர் டி.கே.ஆர். கணேசன் தலைமையிலும், வியாபாரிகள் சங்கம் முன்னெடுத்தும் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக கடமலை மயிலை ஒன்றியம் முழுவதும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. மகாராஜன், அதிமுக மாவட்ட செயலாளர் எம்.பி. ராமர், அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, மலைவாழ் மக்களுக்கு அவர்கள் பல ஆண்டுகளாக பயிரிட்டு வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் வகையில் தமிழக அரசு உரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், மலைவாழ் மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்களை அங்கீகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்டமாக சாலை மறியல், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை உள்ளிட்ட தீவிர போராட்டங்கள் நடத்தப்படும் என போராட்டத்தில் பங்கேற்ற மலைவாழ் மக்களும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் எச்சரிக்கை விடுத்தனர்.

Share this content:

Previous post

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கோரி ‘VOICE2LAW’ அமைதிப் பேரணி: நடிகை ஷெனம் செட்டி பங்கேற்பு

Next post

ராயபுரம் எஸ்டிபிஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம்

Post Comment

You May Have Missed