“இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றி பெறும்”- செங்கோட்டையன் உறுதி
மயிலாடுதுறை: “தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை திமுகவினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன” என அமைச்சர் செங்கோட்டையன் ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மயிலாடுதுறைக்கு இன்று வருகை தந்த வருவாய் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், தவெக மாவட்ட அலுவலகத்தில் தினந்தோறும் நடைபெற்று வரும் விலையில்லா உணவு வழங்கும் பணியினை பார்வையிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் வாக்களித்து விஜயை முதல்வராக்கி உள்ளனர். விஜய் இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதல்வர், ஆர்.எஸ்.பாரதி சொல்வது போல், தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, அவர்களுக்கு (திமுக) தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.
தமிழக இடைத்தேர்தலில் 100% வெற்றியை பெறுவோம். தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை தீர்ப்பதற்கு பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம். விரைவில் மின்தடை சரி செய்யப்படும். கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்.
2017-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே போட்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், முதல்வர் பேச்சை பற்றி எல்லாம் பேச திமுகவுக்கு அருகதை இல்லை” என்று அமைச்சர் கூறினார்.