Loading Now

முதல்வர் அலுவலகம்: சிறப்பு மனுப் பெட்டி அறிமுகம்

சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் தனிப்பிரிவு, தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து வரும் முக்கிய பிரிவாக செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை அமைப்பு, கல்வி உதவித்தொகை, சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தங்களது தனிப்பட்ட மற்றும் பொதுநலக் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மனுக்களை எளிதாகப் பெறும் வகையில் தலைமைச் செயலக வளாகத்தின் வெளியே முதல்வர் தனிப்பிரிவு சார்பில் சிறப்பு மனுப் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தலைமைச் செயலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக அந்தப் பெட்டியில் செலுத்தலாம். அதேவேளையில், அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புபவர்கள் வழக்கம்போல் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்திற்குச் சென்று மனுக்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் வருகை அதிகரித்து வரும் சூழலில், மனுக்களை விரைவாகவும் ஒழுங்காகவும் பெறுவதற்காக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பெறப்படும் அனைத்து மனுக்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைக்காக பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைகளை சிரமமின்றி பெறுவதற்கும், அலுவலக நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த புதிய ஏற்பாடு பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share this content:

Post Comment

You May Have Missed