புதுவண்ணாரப்பேட்டை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஆர்.எஸ். பாரதி சிறப்புரை
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சட்டத்துறை சார்பில், முன்னாள் தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியுடன், மக்கள் விரோத தவெக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று இரவு ஏ.ஐ. கோவில் தெருவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் மருது கணேஷ் தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.டி. சேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
«“ஆர்.கே.நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தைப் பார்த்தால், நாம் எதிர்க்கட்சியா அல்லது ஆளுங்கட்சியா என்றே யோசிக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மக்கள் திரண்டுள்ளனர். ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது திமுக மட்டுமே.»
«திமுகவை அழிக்க நினைத்தவர்கள் யாரும் வரலாற்றில் வெற்றி பெற்றதில்லை. ‘திமுகவை மூட்டைப்பூச்சி போல நசுக்க வேண்டும்’ என்று கூறிய ராஜாஜிக்கே மணிமண்டபம் கட்டியது திமுக அரசுதான்.»
«வடசென்னையின் வளர்ச்சிக்காக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். ஆர்.கே.நகர் தொகுதி எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றி தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது.»
«தற்போதைய அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய திட்டங்களை இதுவரை கொண்டு வரவில்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது, அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, தலா ₹10 லட்சம் நிவாரணம் வழங்கினார். ஆனால் தற்போதைய முதலமைச்சர் சம்பவ இடத்திற்கு செல்லாமல் சென்னைக்கு திரும்பி வந்தார்.»
«திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதம் ₹1,000 வழங்கியது. தேர்தலை முன்னிட்டு அந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, மு.க. ஸ்டாலின் உடனடியாக தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான ₹3,000 மற்றும் ₹2,000 ஊக்கத்தொகையுடன் மொத்தம் ₹5,000-ஐ தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தார்.»
«மக்கள் பணிக்காக கால நேரம் பார்க்காமல் செயல்பட்ட அரசு திமுக அரசு. ஆனால் தற்போதைய அரசு மாலை 6 மணிக்குப் பிறகு அதிகாரிகளே மக்களை சந்திப்பதில்லை.»
«தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிர்வாகக் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. சாலைகள் சேதமடைந்துள்ளன. மழைக்காலம் நெருங்கியும் அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.»
«லஞ்சம், ஊழல் இருக்காது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ளனர். பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான சுமார் ₹10 கோடி மதிப்புள்ள நிலம் குறைந்த மதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.»
«அரசு வழக்கறிஞர் நியமனங்களிலும் முறைகேடு நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. பணம் கொடுத்து பதவி பெறுபவர்கள் நேர்மையாக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.»
«தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அதிகாரிகளின் இருக்கைகளில் அமர்ந்து ஆய்வு நடத்துவது, மருத்துவமனைகளில் சென்று மருத்துவப் பணியாளர்களிடம் விசாரணை நடத்துவது, அதிகாரிகளின் பணிகளை அரசியல் ரீதியாக தலையிட்டு செய்வது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.»
«சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தியது திமுக அரசுதான். வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ சேவையை விரிவுபடுத்தியதும் திமுக அரசே. மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்த ஒன்றிய அரசு தடை ஏற்படுத்தியுள்ளது.»
«1984 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.»
«திமுக தலைவர் சாதாரண தொண்டருக்கும் எளிதில் அணுகக்கூடியவர். ஆனால் தற்போதைய முதலமைச்சரை பொதுமக்கள் எளிதில் சந்திக்க முடியாத நிலை உள்ளது.”»
இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில துணை அமைப்பாளர் தாயகம் கவி, முன்னாள் எம்எல்ஏ எபினேசர், நரேந்திரன், கவி கணேசன், பகுதி செயலாளர் லட்சுமணன், வட்டச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திமுக இளைஞர் அணியினர் கருத்துரைகள் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



Post Comment