அறநிலையத்துறை 2 புதிய மண்டலங்களாக பிரிப்பு – கோயில் நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தம்
சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அறநிலையத்துறை வடக்கு (சென்னை) மற்றும் தெற்கு (திருச்சி) என இரண்டு புதிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மண்டலங்களையும் கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்தஸ்திலான கூடுதல் ஆணையர் பணியிடங்களை தமிழக அரசு புதிதாக உருவாக்கியுள்ளது.
அறநிலையத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையின்படி, கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்துதல், அதிகாரப் பகிர்வை விரிவுபடுத்துதல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக அமைப்பின்படி, வடக்கு மண்டலத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெறுகின்றன. தெற்கு மண்டலத்தின் கீழ் திருச்சி, பெரம்பலூர், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
புதிதாக நியமிக்கப்படும் கூடுதல் ஆணையர்களுக்கு கோயில் சொத்துகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தல், தணிக்கை கட்டணங்களை வசூலித்தல், கோயில் நிலங்களின் வருவாயைக் கண்காணித்தல், நலத்திட்டங்களை ஆய்வு செய்தல் மற்றும் கோயில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் பழனி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் கோயில் நிலங்கள் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், அறநிலையத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நிர்வாக சீர்திருத்தம் கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்கும், நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.



Post Comment