திருவொற்றியூரில் கழிவுநீர் கால்வாய் பணியில் மணல் சரிவு – ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு.
சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 20 அடிக்கும் மேல் ஆழமான பள்ளத்தில் திடீரென மணல் சரிவு ஏற்பட்டதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான ஒப்பந்த தொழிலாளி பூமிநாதன் சிக்கி உயிரிழந்தார்.
கிராமத்தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், மாநகராட்சி அனுமதியுடன் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பணிகள் நடைபெற்றபோது திடீரென மணல் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பணியில் இருந்த சில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், பூமிநாதன் மட்டும் மணலில் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சக தொழிலாளர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பூமிநாதனின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரவு நேரத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Post Comment