Loading Now

Breaking

செம்மஞ்சேரி அருகே குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15வது மண்டலத்திற்குட்பட்ட 200வது வார்டில் உள்ள ஜவகர் நகர் மற்றும் எழில்முக நகர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவதுடன், சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து லாரிகள் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குடிநீர் போதுமான அளவில் கிடைப்பதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், குடிநீருக்காக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பின்னர், பொதுமக்கள் நேரில் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டபோது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் சரிசெய்து குடிநீர் விநியோகம் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், குடிநீர் விநியோகம் தொடங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று செம்மஞ்சேரியில் இருந்து எழில்முக நகர் செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு வாரமாக குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து விரைவில் தண்ணீர் வழங்கப்படும் என்று மட்டுமே கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed