ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கு: அப்பாவுவெற்றி பெற்றதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
“10 ஆண்டுகளுக்கு பிறகு நீதி வென்றுள்ளது” – அப்பாவு உருக்கம்
சென்னை 2016 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வழக்கில், திமுக வேட்பாளர் மு. அப்பாவு வெற்றி பெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் அப்பாவு 2016-ஆம் ஆண்டு தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், மறு வாக்கு எண்ணிக்கையில் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தார்.மேலும், 2016 முதல் 2021 வரை அரசு ஆவணங்களில் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. என இடம்பெற்றுள்ள இன்பதுரை பெயரை நீக்கி, அதற்கு பதிலாக அப்பாவு பெயரை பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.அதே நேரத்தில், இந்த தீர்ப்பின் அடிப்படையில் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கருத முடியாது என்றும், ஆனால் அந்த காலகட்டத்திற்கான எம்.எல்.ஏ. ஓய்வூதியத்தை (பென்ஷன்) கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அப்பாவு உருக்கமான பேட்டிதீர்ப்புக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு, “10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இந்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தாமதமாக கிடைத்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பைப் பெற எத்தனை முறை சென்னை உயர்நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கியிருப்பேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது” என்றார்.மேலும், “கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் இந்த வெற்றியை அவருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். நீதியின் மீது வைத்திருந்த நம்பிக்கை இன்று வெற்றி பெற்றுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.இந்த தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Post Comment