திட்டக்குடி அருகே வயல்வெளியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு: தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை
கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு மேலக்கல்பூண்டி கிராமத்தில் வயல் உள்ளது.
இவர் நேற்று முன்தினம் காலை உர மூட்டைகளை எடுத்துச்சென்று அவரது வயலில் இறக்கினார். அப்போது வயலின் ஒரு பகுதியில் பள்ளமாக இருந்தது. அதைத்தோண்டிய போது வட்ட வடிவ மண் தாழி வெளிப்பட்டது. அதன் உட்பகுதியில் சிறிய குடுவை வடிவ மண்பானைகள், எலும்புத் துண்டுகள் காணப்பட்டன.
இதையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில், நேற்று காலை திட்டக்குடி வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். அதில் பெரிய தாழிக்குள் சிறிய மண்பானைகள் இருப்பது தெரிந்தது. உள்ளே எலும்புத் துண்டுகள் தெரிவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதன்பேரில் அது முதுமக்கள் தாழியாக இருக்கலாம் எனத்கணிக்கப்பட்டது.
மேலும் பெரிய தாழிக்குள் காணப்பட்ட சிறிய தாழிகள், ஈமப் புதைவுடன் தொடர்புடைய தொல்லியல் அமைப்பாக இருக்கலாம் எனத்தெரிகிறது. எனவே, அந்த இடத்தை அப்படியே பாதுகாத்து தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் தாழியினை முழுமையாக ஆய்வுசெய்த பின்பே அது எத்தனை ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவரும்.
தொல்லியல் துறையினர் விரைந்து அப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.