“திருமணம் அவ்வளவு முக்கியமல்ல” – நடிகை திவ்யா கருத்து
தமிழில், பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. இவர் ‘திருமணம் அவ்வளவு முக்கியமில்லை’ என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “திருமணம் செய்து கொள்வது உண்மையிலேயே அவ்வளவு முக்கியம் இல்லை. திருமணம் என்பது நான் யார் என்பதை வரையறுக்காது. திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிகவும் முக்கியம். அதே நேரம் திருமணம் அனைவருக்கும் பொருந்தாது என்று கூறவில்லை. மனிதர்களாகிய நாம் எப்போதும் மாற்றங்களை விரும்புகிறோம்.
ஒருவேளை பிரச்சினை அங்கிருந்துதான் தொடங்குகிறது. நல்ல நண்பர்களாகவும், ஒரே மாதிரியான மதிப்புகளைக் கொண்டவர்களாகவும் இருந்தால், திருமணம் செய்துகொள்வது நல்ல யோசனையாகத் தோன்றும். திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் நான் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
திருமணம் செய்துகொள்ள விரும்பும் சரியான நபரைச் சந்தித்து விட்டீர்களா? என்று கேட்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரைச் சந்திக்கவில்லை. அதில் இப்போது கவனம் செலுத்தவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.