பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடி – ஒரு மாத சேவை இயக்கத்துக்கு பாஜக ஏற்பாடு
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பாஜக சார்பில் ஒரு மாத காலத்திற்கு ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற மாபெரும் மக்கள் சேவை இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதன்முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக பணியாற்றிய அவர், 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பிரதமர் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்து, தொடர்ந்து நாட்டுக்கு சேவை செய்து வருகிறார்.
இதன் மூலம் வருகிற அக்டோபர் 7-ம் தேதியுடன் அவர் அரசுப் பதவியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். இதையொட்டி பாஜக சார்பில் ஒரு மாத காலத்திற்கு ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற மாபெரும் மக்கள் சேவை இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்காக பாஜக தேசிய தலைவர் நிதின் நவின் தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமரின் பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் நோக்கம் கொண்ட இந்த மக்கள் சேவை இயக்கம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும்.
இதில் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்பார்கள். செப்டம்பர் 17-ம் தேதி நாடெங்கிலும் ஒரு நாள் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரத்த தான முகாமுடன் இந்த இயக்கம் தொடங்கும்.
அதைத் தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கு தூய்மைப் பணிகள், மரக்கன்று நடுதல் மற்றும் நலத்திட்டங்களை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடரும். இந்த இயக்கத்தில் சாதாரண குடிமக்களும் இணைந்து தங்களால் முடிந்த சேவைகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.