டாஸ்மாக்முறைகேடுவழக்கு: மேலும்சிலரைகைதுசெய்யலஞ்சஒழிப்புபோலீஸார்தீவிரம்
டாஸ்மாக் நிறுவனத்தில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்முதல், டெண்டர் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த மாதம் 28-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன் (ஐ.ஏ.எஸ்.), டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ரதேஷ், கார்த்திக் ஆகியோர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத சில அரசு ஊழியர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட மறுநாளே, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை கைப்பற்றினர்.
இதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களாகக் கூறப்படும் கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கிடைத்த தகவல்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் கைது நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், “விசாரணை சரியான திசையில் நடைபெற்று வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
Post Comment