Loading Now

ஆந்திராவுக்கு தமிழகத்திலிருந்து 500 மின் பணியாளர்கள்!

25 குழுக்களாகப் பிரித்து அனுப்பி வைப்பு – அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

ஆந்திர மாநிலத்தில் முரசு புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, மின்சாரக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிக்காகத் தமிழகத்திலிருந்து 500 மின் பணியாளர்கள் கொண்ட சிறப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் இருந்து 25 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 500 மின் பணியாளர்களை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ஆந்திர மாநிலத்தில் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து கனமழையும் பெய்து வருவதாகத் தெரிவித்தார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைத் தொடர்புகொண்டு மின்சாரத் துறை சார்ந்த உதவிகளைக் கோரியதாகவும், ஆந்திர மின்சாரத் துறை அமைச்சரும் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கூறினார்.

இதையடுத்து ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சிறப்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆந்திராவில் நிவாரணம் மற்றும் மின்சாரச் சீரமைப்புப் பணிகளை முழுமையாக முடித்த பின்னரே அவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்றும் தெரிவித்தார். தமிழகத்திலும் மின்சாரப் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றைச் சரிசெய்யத் தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த உதவி இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறினார்.

மின்சாரக் கொள்முதல் மற்றும் ஜிஎஸ்டி வருவாய் குறித்து:

மின்சாரக் கொள்முதல் தொடர்பாகத் தவறான செய்திகள் அதிகளவில் வெளியிடப்படுவதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், அடுத்த 10 ஆண்டுகளுக்கான மின்சாரத் திட்டங்கள் தயாராகி வருவதாகத் தெரிவித்தார். சோலார் மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரி சேமிப்புக் கலன் திட்டம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் கூறினார்.

தொடர் மழை காரணமாகத் தமிழகத்தின் மின்சாரத் தேவை 16,000 மெகாவாட் அளவுக்குக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தவறான ஆட்சியின் காரணமாகவே ஜிஎஸ்டி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நிறுவனங்கள் தமிழகத்தைவிட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்றதாகவும் விமர்சித்தார்.

டாஸ்மாக் விவகாரத்தில் திமுக மீது குற்றச்சாட்டு:

டாஸ்மாக் விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்கும்போது கரூர் நிறுவனம் கோபப்படுவதாகக் குறிப்பிட்டார். கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றதாகவும், அதற்குத் திமுக சார்ந்த தொழிற்சங்கம் ஆதரவளிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், அனைத்துத் துறைகளிலும் கடினமான சூழலைக் கடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சியில் முதலமைச்சர் செல்ல அனுமதிக்கப்படாத இடங்களுக்குத் தற்போதைய முதலமைச்சர் சென்று வருவதாகவும், கடந்த மாதம் மதுரைக்குச் சென்றது அதற்கு ஓர் உதாரணம் என்றும் தெரிவித்தார்.

கைதிகள் தப்பியோட்டம் – விரைவில் குழு அமைப்பு:

சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடும் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், முதலமைச்சரிடம் அனுமதி பெற்று விரைவில் இதுகுறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கப்படும் என்றார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஒரே நம்பிக்கை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதுதான் என்றும், அது நடக்காது என்றும் விமர்சித்தார்.

மீனாட்சி அம்மன் கோயில் மின்தடை விவகாரம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தபோது ஏற்பட்ட மின்தடை விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், கோயில் அதிகாரி ஒருவர் மட்டுமே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழல்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குவதே நடைமுறை என்றும், கோயிலில் சரியான முறையில்தான் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்தார்.

Share this content:

Post Comment

You May Have Missed