Loading Now

ஆர்.கே. நகரில் மழைநீர் தேங்கும் சவாலான பகுதிகளில் இன்று மக்கள் பாதிப்பின்றி உள்ளனர்!

யார் ஆட்சி செய்கிறார் என்பதல்ல, யார் என்ன செய்தார் என்பதே முக்கியம்

சென்னை தண்டையார்பேட்டையில், திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் நிதி ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த மையத்தின் கூடுதல் கட்டடத்தைப் பார்வையிட்ட ஆர்.கே. நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோருடன் இணைந்து, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இத்திட்டத்தால் மக்கள் பயனடைவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் சாதனைகள்

செய்தியாளர்களிடம் பேசிய எபினேசர், 2021–2026 காலகட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதிக்குப் பல்வேறு பணிகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். சென்னையின் மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் வகையில் ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்றதாக அவர் கூறினார். மேம்பாலங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டுத் திடல்கள் என வரலாற்றில் இதுவரை செய்யப்படாத பணிகள் நிறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பல பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் காரணமாகத் திறப்பு விழா தள்ளிப்போனதாகவும், ஆட்சி மாற்றத்தால் கட்டடங்கள் திறக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார். தற்போது அவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

இடப்பற்றாக்குறையால் ஏற்கனவே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டதாகவும், நோயாளிகள் தங்கும் வகையில் படுக்கை வசதிகள் கொண்ட அறைகள் வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மழைநீர் தேங்காத ஆர்.கே. நகர்

பருவமழை நெருங்கும் நிலையில், ஆர்.கே. நகரில் சமீபத்தில் பெய்த மழையின்போதும் எங்கும் நீர் தேங்கவில்லை என எபினேசர் தெரிவித்தார். தண்ணீர் தேங்கக்கூடிய அன்னை சத்யா நகர், எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், பெரியார் நகர், கைலாசம் தெரு, சிங்காரவேலன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், சுமார் 50,000 முதல் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத சம்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு இடத்திலும் 100 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார்கள் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டு, பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழை பெய்தால் பெரிதும் பாதிக்கப்படும் அன்னை சத்யா நகர் போன்ற தாழ்வான பகுதிகளில், அதிகபட்சமாக அரை மணி நேரத்தில் மழைநீர் வடியும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலனே முக்கியம்

“யார் பெயர் எடுக்கிறார்கள், யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்கள் பயனடைகிறார்களா என்பதே முக்கியம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர்” என்று எபினேசர் தனது உரையை நிறைவு செய்தார்.

Share this content:

Previous post

மீனவர் காங்கிரஸ் சார்பில் கே.எஸ். அழகிரி பிறந்தநாள்: காக்கும் கரங்கள் இல்லத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

Next post

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கே பி ராஜி – யின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் விலை இல்லா இலவச உணவகம் திறப்பு விழா

Post Comment

You May Have Missed