‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸுக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின்கீழ் 22 காரட் தரத்தில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
4.42 லட்சம் மோதிரங்கள்
இத்திட்டத்துக்காக 4.42 லட்சம் தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் டெண்டர் கோரியது. அதில், ஒரு கிராம் தங்கத்துக்கான மார்க்கெட் விலையோடு, செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட இதர கட்டணமாக தங்கள் நிறுவனத்துக்கு ரூ.1 பைசா மட்டும் கூடுதலாக வழங்கினால் போதும் என்று கோரிய கேரளாவைச் சேர்ந்த பிரபலமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டரை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் தங்க மோதிரத்தை அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
ஹால்மார்க் முத்திரை பெறவே ஒரு மோதிரத்துக்கு ரூ. 45 கட்டணம் செலுத்த வேண்டிய சூழலில், வெறும் ரூ.4,417-க்கு 4.42 லட்சம் மோதிரங்களை சப்ளை செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது வணிக ரீதியில் சாத்தியமற்றது.
இதை அனுமதித்தால், நகை தரமற்றதாக இருக்க வாய்ப்பு உள்ளது. தவிர, மோதிரம் டெண்டரை மருத்துவ சேவைக் கழகம் இறுதி செய்வது பொருத்தமற்றது. இவ்வாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: தங்க மோதிரம் திட்டம் தவறு என்றோ, டெண்டர் விதிமீறல் நடந்ததாகவோ மனுதாரர் வழக்கு தொடரவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்து மட்டுமே வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுபோல டெண்டரை ஒரு நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. மேலும் அந்த நிறுவனம் மோதிரத்தை ஒரு பைசாவுக்கு சப்ளை செய்தால் அதன்மூலம் அரசுக்குத்தான் லாபம் கிடைக்கும். நிறுவனத்தின் வரவு – செலவு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
ஏற்கெனவே தங்க நகை வியாபாரத்தில் உள்ளதால் ரூ.1 பைசாவுக்கு சப்ளை செய்ய நிறுவனம் முன்வந்து இருக்கலாம். ஒருவேளை மோதிரம் தரமின்றி இருந்தால் டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள்.
எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இருப்பினும் இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும். இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.