பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, விடுமுறை விடப்பட்டு, அக்.6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி, 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.16 முதல் 24-ம் தேதி வரையும், 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்.16 முதல் 25-ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும். பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
6, 8-ம் வகுப்புகள், பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் 10, 12-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11-ம் வகுப்பு களுக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறும். மாணவர்களுக்கு செப்.26 முதல் அக்.5-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும். விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்.6-ம் தேதி திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வினாத்தாள் பதிவிறக்கம்: காலாண்டுத் தேர்வு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான வினாத்தாளை எமிஸ் தளத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான வினாத்தாளை https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ள வேண்டும்.
முன்கூட்டியே வழங்கப்படும் வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய தேர்வு நாளில் மட்டுமே அந்தந்த பாடத்துக்கான வினாத்தாளைப் பயன்படுத்த வேண்டும். வினாத்தாள் பதிவிறக்கம், அச்சிடுவதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால் ‘14417’ என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.