Loading Now
×

இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு: மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு

image-4-1024x576 இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு: மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: எல்பிஜி சிலிண்டர்கள் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து எல்பிஜி வருவது தடைபட்டுள்ளது.
இதனால், கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த மக்கள், வீட்டு உபயோக சிலிண்டருக்கான புக்கிங்கை அதிக அளவில் செய்யத் தொடங்கினர். போன் மூலம் அதிக அளவில் புக்கிங் செய்யப்படுவதால் அந்த சிஸ்டம் செயலிழந்தது. இதையடுத்து எல்பிஜி ஏஜென்சி முன்பு அதிக அளவில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில், எல்பிஜி சிலிண்டர் உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா கூறியதாவது: வழக்கமாக தினந்தோறும் நாடு முழுவதும் 55.7 லட்சம் பேர் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் செய்வார்கள். சிலிண்டர் கிடைக்காது என்று கருதி, கடந்த சில நாட்களாக 75.7 லட்சம் பேர் சிலிண்டருக்காக புக்கிங் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்தப் பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியை 30 சதவீதம் அதிகரித்துள்ளோம். எனவே, சிலிண்டர் கிடைக்காது என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
புக்கிங் செய்யும் அனைவருக்கும் காஸ் சிலிண்டர் நிச்சயம் கிடைக்கும். மக்கள் பீதி அடையாமல் இருக்கவேண்டும். மக்களுக்கு 100 சதவீத காஸ் சிலிண்டர் விநியோகம் நடைபெற்று வருகிறது. எனவே, இதுதொடர்பாக யாரும் பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களை பீதி அடையச் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this content:

Previous post

ஈரான் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா படுகாயம் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தகவல்

Next post

ரூ.1,844 கோடியில் 11 சாலைகளை திறந்தார் முதல்வர்: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.212 கோடி திட்டங்கள் தொடக்கம்

You May Have Missed