வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட காஷ்மீர் முதல்வர் உமர் ஆதரவு
ஸ்ரீநகர்: வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த உத்தரவையும் காங்கிரஸ் கட்சி போட வேண்டாம் என்றும் தேசிய மாநாட்டுக் கட்சி விமர்சித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் வந்தே மாதரம் முழு பாடல் பாடப்பட்டது. இரு மூத்த தலைவர்களின் ஆதரவுடனேயே வந்தே மாதரம் முழு பாடல் பாடப்பட்டது.
இந்நிலையில், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால், “வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தையும் பாட வேண்டாம். அந்தப் பாடலை குறுகிய வடிவத்தை மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் உருவாக்கி நமக்குத் தந்துள்ளனர். எனவே, அவர்களின் ஞானத்தையும் தீர்ப்பையும் மதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுடன் தேசிய மாநாட்டுக் கட்சி இணைந்து நிற்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பஷீர் அகமது கூறும்போது, “கூட்டணிக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டுமா அல்லது எவ்வளவு பாட வேண்டும் என்று எங்கள் கட்சிக்கு உத்தரவிடத் தேவையில்லை. கருத்தைச் சொல்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபாலுக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை கூட்டணிக் கட்சிகள் மீது திணிக்க வேண்டாம். இது மக்களின் விருப்பம்” என்றார்.