மருமகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்த ஆகாஷ் ஆனந்த்தை கடந்த 3-ம் தேதி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கிய மாயாவதி, இன்று கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். இவருக்கு மாயாவதி கட்சியில் அதிக முக்கியத்துவத்தை அளித்து வந்தார். தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த்தை அறிவித்த மாயாவதி, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பையும் அவருக்கு வழங்கினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பியும், ஆகாஷ் ஆனந்த்தின் மாமனாருமான அஷோக் சித்தார்த்துக்கும் மாயாவதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் சிக்கல் எழுந்தது. இதனால், ஆகாஷ் ஆனந்த் – மாயாவதி இடையேயும் பிரச்சினை அதிகரித்தது.
இதன் காரணமாக, ஆகாஷ் ஆனந்த்துக்கு கட்சியில் இருந்த முக்கியத்துவத்தை மாயாவதி குறைத்தார். மேலும், அஷோக் சித்தார்த் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்றும் அதுதான் ஆகாஷ் ஆனந்த்தின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதாக இருக்கும் என்றும் அறிவித்தார்.
இதனால், அஷோக் சித்தார்த்த அரசியலில் இருந்து விலகுவார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் ஆகாஷ் ஆனந்த்தை நீக்குவதாக மாயாவதி அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, பொது வாழ்வில் இருந்து முழுமையாக விலகுவதாக அசோக் சித்தார்த் அறிவித்தார். அவரது அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், ஆகாஷ் ஆனந்த்தை கட்சியில் இருந்தே நீக்கும் அறிவிப்பை மாயாவதி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அசோக் சித்தார்த் இன்று அறிவித்தது சரியான நடவடிக்கைதான். ஆனால், அது மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது. செய்யாமல் இருப்பதைவிட தாமதமாகவேனும் செய்வது சரி என்ற அடிப்படையில் அஷோக் சித்தார்த்தின் முடிவை வரவேற்கிறேன்.
கட்சியின் உண்மைான நலன்கள் மற்றும் தனது அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைவிட உறவுகள் மீதான பற்றுதலுக்கே ஆகாஷ் ஆனந்த் அதிக முக்கியத்துவும் அளித்துள்ளார். இருமனதுடன் இருக்கும் அவரால் கட்சிக்கு எவ்வாறு நன்மை செய்ய முடியும்? எனவே, அவர் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். ஆகாஷ் ஆனந்த்தை கட்சியில் இருந்து நீக்குவது கட்சியினருக்குச் செய்யும் நன்மையாகவே கருதுகிறேன்.
உத்தரப் பிரதேசத்தில் முழு பெரும்பான்மையுடன் கூடிய அரசை அமைக்கும் கட்சியின் இலக்கை நோக்கி முழு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.