மாணவர் போராட்டத் தடை சுற்றறிக்கை: இணை இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
சென்னை: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பா. சிந்தியா செல்வியிடம் விளக்கம் கேட்டு கல்லூரிக் கல்வி ஆணையர் பா. பொன்னையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலர் எம். சாய்குமார் தலைமையில் கடந்த ஜூலை 27-ம் தேதி நடைபெற்ற சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை சிறப்பு செயலர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கல்லூரிக் கல்வி ஆணையர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பினார்.
அதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பா. சிந்தியா செல்வி ஆகஸ்ட் 17-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த சுற்றறிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த சுற்றறிக்கையை உயர்கல்வித் துறை ஆகஸ்ட் 19-ம் தேதி திரும்பப் பெற்றது.
இந்நிலையில், இணை இயக்குநர் சிந்தியா செல்விக்கு கல்லூரிக் கல்வி ஆணையர் பா. பொன்னையா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை கல்லூரிக் கல்வி ஆணையர் வழியாக அனுப்பாமல், தங்கள் அளவிலேயே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியதுமான அந்தக் கடிதத்தை ஆணையரின் முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெறாமல் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பது தொடர்பான சுற்றறிக்கை விவகாரம் தற்போது உயர்கல்வித் துறையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Post Comment