அமெரிக்கர் உள்ளிட்ட 7 வெளிநாட்டினர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை: என்ஐஏ சிறப்பு வழக்கறிஞர் தகவல்
புதுடெல்லி: அமெரிக்கர் உள்ளிட்ட 7 வெளிநாட்டினர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்டைக் கொல்கத்தா விமான நிலையத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதே நாளில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 7 பேர் மீதும் டெல்லியிலுள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் தீவிரவாத தடுப்பு சட்டமான யுஏபிஏ பிரிவுகள் இடம்பெறவில்லை. இதனால் இந்தப் பிரிவு கைவிடப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து என்ஐஏ சிறப்பு அரசு வழக்கறிஞர் கூறும்போது, “இதுவரை நடந்த விசாரணையின்போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் (ஐஎப்ஏ) கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அந்தப் பிரிவுகளின் கீழ் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. யுஏபிஏ பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார்.