பழநி மட நிலம்: பத்திரப்பதிவு ரத்து உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நிலத்தை வாங்கிய சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, கோயில் சொத்தாகக் கூறப்படும் நிலம் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பு, நிலம் பல தலைமுறைகளாக தனியார் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும், அது கோயில் சொத்து அல்ல என்றும், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை வாங்கியதாகவும் வாதிட்டது.
மறுபுறம், பழநி கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கு தற்போது பழநி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், உரிமை விவகாரம் முடிவடையாத நிலையில் நிலத்தை விற்பனை செய்தது சட்டப்படி ஏற்க முடியாதது என்றும் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பத்திரப்பதிவு ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்க மறுத்தது. மேலும், பழநி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கில் சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோரை தரப்பினராக இணைக்க உத்தரவிட்டது.
அத்துடன், பத்திரப்பதிவு ரத்து தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு, மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


Post Comment