Loading Now

மழைக்கால தொற்று நோய் தடுப்பு: அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர்கள் அருண்ராஜ், என். ஆனந்த் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், மழைக்கால தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் என். ஆனந்த் பங்கேற்று அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல், அதிகாரிகள் தங்களது பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றார்.

“நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, நோய் வராமல் தடுப்பதே அரசின் முக்கிய நோக்கம். கடந்த கால பணிமுறைகளை விட, தற்போதைய சூழலில் முதல்வரின் நம்பிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு அதிகாரியும் பொறுப்புணர்வுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில் நோய் பரவலைத் தடுக்க மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, கொசு ஒழிப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில், “கொரோனா போன்ற பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம். அதுபோல மழைக்கால சவால்களையும் திறம்பட சமாளிக்க முடியும். கொசு தொல்லையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் நோய் தடுப்பு பணிகள் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளிலும் இடையூறு ஏற்படாதபடி சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், மழைக்கால பணிகளுக்காக கூடுதல் தன்னார்வலர்களையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் மழைக்காலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்,” என்றார்.

அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம் தொடர்பாக கூறுகையில், “அனைத்து தரப்பினரும், அனைத்து அரசியல் கட்சியினரும் அந்தப் பேச்சை கண்டித்துள்ளனர். பெண்களை பற்றி யாரும் தரக்குறைவாக பேசக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கான கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

சட்டப்பேரவை தொடர் நடைபெற உள்ளதை அறிந்திருந்தும், அதில் பங்கேற்காமல் இருக்க திட்டமிட்டே அவ்வாறு பேசப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களை இழிவுபடுத்துவது தவறே. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. கொச்சையான, அருவருக்கத்தக்க வகையில் பேசிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இன்னும் அதிக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அரசியலை அரசியல் ரீதியாகவே பேச வேண்டும்,” என்றார்.

‘பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு இது எச்சரிக்கையா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நிச்சயமாக” என்று அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.

Share this content:

Post Comment

You May Have Missed