Loading Now

கும்மிடிப்பூண்டியில் 174 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கும்மிடிப்பூண்டி, அக். 27: கும்மிடிப்பூண்டியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ். விஜயகுமார் பங்கேற்று 174 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வாழ்த்தினார்.
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கும்மிடிப்பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜி. மோகனா வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் திட்ட அலுவலர் ஏ. கலாவதி, வட்டார மருத்துவ அலுவலர் எஸ். தீபலட்சுமி, குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் இந்திராகாந்தி, குணசுந்தரி, செல்வி, ஜெயசெல்வி, ராணி, தமிழ்ச்செல்வி, கெஜலட்சுமி, வேளாங்கண்ணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், மத்திய அரசின் ஆர்.பி.எஸ். திட்டத்தின் வட்டார மருத்துவர் அம்ஜத்கான், கர்ப்பிணிகளுக்கான பேறுகால ஆலோசனைகள் மற்றும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
எம்எல்ஏ அறிவுரை
விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ். விஜயகுமார் பேசுகையில், கர்ப்பிணிகள் தங்களது உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், குழந்தை பிறப்பதற்கு முன்பைவிட, குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களுக்கு குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பது பெரிய பொறுப்பாக உள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு அன்புடன், அவர்களின் எதிர்கால இலட்சியத்தையும் உருவாக்கும் வகையில் அனைவரும் வளர்க்க வேண்டும் என்றார்.
174 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்க இலக்கு
சமுதாய வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்ற 174 கர்ப்பிணிகளுக்கும் பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு, தமிழக முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் அணிவிக்க ஆவலாக இருப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.
இதுவரை கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் 600 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலைகளின் சமூகப் பங்களிப்பு நிதியான ரூ. 5 கோடியிலிருந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
சீர்வரிசை வழங்கி விருந்து
தொடர்ந்து, 174 கர்ப்பிணிகளுக்கும் வளைகாப்பு நடத்தி, அவர்களுக்குச் சீர்வரிசைப் பொருட்களை எம்எல்ஏ எஸ். விஜயகுமார் வழங்கினார். பின்னர், அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டதுடன், கர்ப்பிணிகளுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார்.
நிர்வாகிகள் பங்கேற்பு
இந்நிகழ்வில் தவெக மாவட்டப் பொருளாளர் ஜி. கிருபாகரன், தவெக ஒன்றியச் செயலாளர்கள் அருண், அன்புமலர், அசோகன், ஜோதிபிரகாசம், நகரச் செயலாளர் பழனி, மாவட்ட மாணவர் அணியமைப்பாளர் இர்ஷாத், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் விஜய், தவெக நிர்வாகிகள் என்.எஸ்.ஆர். நிஜாம், எம்.எஸ்.எஸ். சரவணன், ரமேஷ், நகரத் துணைச் செயலாளர் மீனா, மகளிர் அணிநிர்வாகி உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நியூஸ் தமிழ் டுடே | கும்மிடிப்பூண்டி

Share this content:

Post Comment

You May Have Missed