Loading Now
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேட்டி

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிப்பதற்குப் பதிலாக, அரசு விசாரணைக் குழு அமைத்து உண்மை நிலையை வெளியிட வேண்டும் – திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேட்டி

பெரியார் நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு தரப்பில் இதுவரை விரிவான செய்தி அறிக்கையோ, விளக்கமோ வெளியிடப்படாதது ஏன் என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெரியார் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதல் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்குவதற்குப் பதிலாக, திமுகவைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்த நிகழ்வை விட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலகத்துக்குச் சென்று பார்வையிட்டது அதிகமாகப் பேசப்பட்டதால், தற்போது இந்த விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

பெரியார் நூலகத்துக்கான புத்தகங்களைத் தேர்வு செய்வதற்கும், கொள்முதல் செய்வதற்கும் திமுக ஆட்சிக் காலத்தில் குழு அமைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய புத்தகக் கொள்முதல் தொடர்பான முழுமையான விவரங்களை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றார்.

நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கிய பல்வேறு நிறுவனங்களிடம் தாம் பேசியதாகவும், அவர்களுக்கான பணப்பரிவர்த்தனைகள் இணையவழியாக நடைபெற்றதாகத் தெரிவித்ததாகவும் கூறினார். எனவே, அந்தப் பணப்பரிவர்த்தனைகளுக்கான வங்கி ஆதாரங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

குறிப்பாக, அகல் விளக்கு பதிப்பகத்துக்கு எந்தத் தேதியில் புத்தகக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது, புத்தகங்கள் எப்போது நூலகத்துக்கு வந்து சேர்ந்தன, அந்த நிறுவனத்துக்கு எப்போது வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்பப்பட்டது ஆகிய விவரங்களை அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், புத்தகக் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்த அரசு ஏன் தனிக் குழு அமைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காமல், ஆளுங்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினர் மட்டுமே பதிலளிப்பதாகவும் விமர்சித்தார்.

சில புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் பெயர்கள் மற்றும் பதிப்பக விவரங்கள் குறித்தும் சந்தேகங்களை எழுப்பிய பரந்தாமன், இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் எந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் அரசு ஆவணங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

ஒரு புத்தகத்தின் விலை ரூ.50 ஆக இருக்கும்போது, அது ரூ.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், அதற்கான காரணங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இதுபோன்ற அடிப்படை விவரங்களைக்கூட அரசு வெளிப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், அமைச்சர் ராஜ்மோகன் லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாகக் கூறிய விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய பரந்தாமன், இதுதொடர்பாகத் தாம் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கடிதம் எழுதியதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது தவெக அரசுதான் என்ற நிலையில், பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் அரசே விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்காமல், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிப்பதன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூலகம் போன்றவற்றில் எழாத பிரச்சினைகள் பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதலில் மட்டும் ஏன் எழுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக தவறு செய்திருந்தால் அதற்கான ஆதாரங்களை அரசு வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், எந்த ஆதாரமும் இல்லாமல் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் திமுக மீது பழி சுமத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தார்.

பெரியார் தொடர்பாக தற்போது ஆளுங்கட்சியினர் அதிக அக்கறை காட்டுவதாகக் கூறிய அவர், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட கடந்தகால நிகழ்வுகளையும் விமர்சித்தார்.

அரசு விளக்கம் அளிக்க வேண்டும்:

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதி, புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, நிறுவனங்களுக்கு வங்கிப் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தப்பட்ட விவரம், புத்தகங்களின் கொள்முதல் விலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்று பரந்தாமன் தெரிவித்தார்.

Share this content:

Post Comment