Loading Now

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்!

image-5-1024x567 கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்!

வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்த்த வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கூட்டமைப்பு அவசரக் கோரிக்கை

தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – வங்கிக் கடன்களை ஒருமுறை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தல்.

தமிழகத்தில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். உற்பத்திச் செலவு உயர்வு, கோழி இறப்பு, நோய்த்தொற்று பாதிப்புகள், விற்பனைத் தடைகள் மற்றும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத கோரிக்கைகள் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான பண்ணை விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

குறிப்பாக, கோழி நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு கிலோ கோழிக்கு ரூ.6.50 மட்டுமே வளர்ப்புக் கூலியாக வழங்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த ஆறு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம், எரிபொருள், அடுப்புக்கரி, தொழிலாளர் சம்பளம், பண்ணைப் பராமரிப்பு மற்றும் உபகரணங்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் தற்போதைய வளர்ப்புக் கூலியை வைத்து பண்ணைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஒரு கிலோ கோழிக்கு வழங்கப்படும் வளர்ப்புக் கூலியை ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு, கோழி நிறுவனங்கள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களை அழைத்து உடனடியாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரிக்கை

ஒப்பந்தப் பண்ணை விவசாயிகள் மற்றும் தனியார் முறையில் கோழி வளர்க்கும் விவசாயிகள் எனப் பலரும் நோய்த்தொற்று மற்றும் கோழி இறப்புகளால் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனுடன் விற்பனைத் தடைகள் மற்றும் சந்தை பாதிப்புகளும் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கியுள்ளன.

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனைத் தடைகள் குறித்து உரிய ஆய்வு செய்து, தேவையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் அவற்றை நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பண்ணை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற கோழிக்குஞ்சுகள், தீவனங்கள் குறித்து புகார்

கோழி நிறுவனங்கள் வழங்கும் தரமற்ற கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்களால் கோழிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், இறப்புகளும் ஏற்படுவதாக ஒப்பந்தப் பண்ணை விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் விவசாயிகள் மீதே சுமத்தப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்களின் தரத்தை அரசு கண்காணிக்க வேண்டும். நிறுவனங்களின் தவறுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பேற்கும் வகையில் உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரூ.40 முதல் ரூ.50 லட்சம் முதலீடு – வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை

ஒரு கோழிப்பண்ணையை அமைப்பதற்கு சுமார் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக வங்கிகளில் கடன் பெற்று, குடும்பச் சொத்துகளையும் அடமானம் வைத்து தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடியால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வங்கிக் கடன்களை ஒருமுறை தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு விவசாயிகள் உருக்கமான வேண்டுகோள்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் இலவச உதவி கேட்கவில்லை; தங்களுடைய உழைப்புக்கு உரிய வருமானத்தையும், தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கான நியாயமான உரிமையையுமே கேட்கிறார்கள்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இப்பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

வளர்ப்புக் கூலியை உயர்த்த வேண்டும், நோய்த்தொற்று இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிரந்தர நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

விவசாயிகள் வாழ்ந்தால்தான் கோழிப்பண்ணைத் தொழில் வாழும்!

இப்படிக்கு:

தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூட்டமைப்பு

மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள்:

  • ABT M. மகாலிங்கம் – 9976359188
  • நீலாவதி தங்கவேல் – 7010624625
  • தேவி பழனிசாமி – 8526238139
  • சக்திவேல் – 9994792940
  • ராஜாமணி – 9976608825
  • ஹேமலதா வாசு – 9047411555
  • விஜயகுமார் – 9842290406
  • ஆர். பாபு ராமச்சந்திரன் – 9941260400
  • பனை முருகன் – 93624 10909
  • ஸ்ரீமன் லிங்கா ரெட்டி – 9445522577
  • செல்லத்துரை – 9789689607

Share this content:

Post Comment