தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புகார் குழு நோயாளிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் புகார் அளிக்கலாம்
தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, அவசர சிகிச்சை, உயர்தர அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகள் ஒரே இடத்தில் கிடைத்து வருகின்றன. இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்கும் ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனைத் தடுக்கும் வகையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் Sumeet என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் 3 பேர் கொண்ட புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குழுவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர்கள் மற்றும் அலைப்பேசி எண்கள் பொதுமக்கள் எளிதில் அறிந்து புகார் அளிக்கும் வகையில், மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளில் அறிவிப்பு பலகைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் கட்டாயமாக பணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அல்லது அவர்களது உறவினர்களிடம் யாரேனும் பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உடனடியாக மருத்துவமனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகார் தொடர்பு எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Post Comment