

தூத்துக்குடியில்என்ஐஏஅதிகாரிகள்சோதனை: பிஹார்இளைஞர்கள் 4 பேரிடம்விசாரணை
தூத்துக்குடி: பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிஹார் இளைஞர்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஹார் மாநிலத்தை சேர்ந்த முகமது (22) என்ற இளைஞர் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் பிஹார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் செல்போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்தபோது, முஸ்பிக் ஆலம் தூத்துக்குடி அருகே சிலுவைப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்துக்கு பெயின்டர் பணிக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தமிழகம் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் 2 பேர் இன்று தூத்துக்குடிக்கு வந்து சிலுவைப்பட்டியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அறை ஒன்றில் 7 பேருடன் தங்கி இருந்த முஸ்பிக் ஆலம் மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அவரது உடமைகள் மற்றும் அவர் தங்கி இருந்த அறை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது, தீவிரவாதத்துடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களை தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் (ஐபி) ஆகியோர் தொடர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post Comment