Loading Now

இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம் குமார் கடும் கண்டனம்

பாலியல் குற்றவாளிகளுக்கு 15 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்க வேண்டும் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்

சென்னை, அக்.10:
இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் மற்றும் நிறுவனர் திரு. ராம் குமார் அவர்கள் இன்று (10.10.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் பாலியல் வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது நடந்த காலணி எறிதல் சம்பவம், தூய்மை பணியாளர் நிரந்தரம், மற்றும் தனியார் ஆம்னி பஸ் கட்டண உயர்வு ஆகிய முக்கிய பிரச்சினைகளில் கடுமையான கண்டனங்களையும் கோரிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் பாலியல் வழக்கு குறித்து

“பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான குற்றங்களை தடுக்க 15 நாட்களுக்குள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் அவசியம். இதுபோன்ற தீர்மானம் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.
இத்தகைய மிருகத்தனமான செயல்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை. சம்பந்தப்பட்ட காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்; அவர்களை வேலையில் இருந்து நீக்கவும் வேண்டும். போலீஸ் நிலையங்களுக்குள்ளேயே இத்தகைய வன்முறைகள் நிகழ்வது மிகுந்த அவமானகரமானது” என அவர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் மீது நடந்த சம்பவம் குறித்து

“இந்த சம்பவம் குறித்து பாஜக தலைவர்கள் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எச்.ராஜா போன்றோர் வாய்திறந்து கண்டனம் தெரிவிக்காதது சாதி அடிப்படையிலான பாகுபாடு இன்னும் பாஜகவில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு சான்று.
ஆர்எஸ்எஸ் சிந்தனை தான் இத்தகைய வன்முறையின் மூல காரணம். தேசப்பற்றை விட மதத்தை முன்னிறுத்தும் பாஜக, நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருகிறது” என்று கடுமையாக அவர் விமர்சித்தார்.

தூய்மை பணியாளர் நிரந்தரப் பணியிட கோரிக்கை

“2021 தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தூய்மை பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் அது நடைமுறையில் இல்லை.
தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து பணியாளர்களின் சம்பளத்தை ₹23,000 லிருந்து ₹16,000 ஆகக் குறைத்தது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்.
தூய்மை பணியாளர் பிரச்சினையில் திமுக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

தனியார் ஆம்னி பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக

“தீபாவளி பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை ₹5,000 முதல் ₹8,000 வரை ஏற்றி வசூலிப்பது மக்கள் மீது கொள்ளை நடத்துவது போல உள்ளது.
2016-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் அரசு தான் ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்திருந்தும், அதனை அரசு நடைமுறைக்கு கொண்டு வரவில்லை.
நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு கூட செல்வதற்கு அச்சப்படுகின்றனர்” என்று கூறிய ராம் குமார்,
“ஒரு கிலோமீட்டருக்கு ₹2.50 என்ற ஒரே கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையின் முடிவில் அவர் கூறியதாவது:

“பெண்கள் மீதான வன்முறைகள், சாதி பாகுபாடுகள், ஏழை மக்களின் தொழில்சார் துன்பங்கள் மற்றும் பஸ் கட்டண கொள்ளைகள் ஆகியவை — அனைத்தும் மக்கள் வாழ்க்கையை பாதிக்கின்றன.
மக்கள் நலனுக்காக அரசு அரசியல் கௌரவத்தை விட்டு நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

Share this content:

Post Comment

You May Have Missed