Loading Now

மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.

அதன்படி மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தவெக வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) – மரகதம் குமாரவேல், தவெக துணைப் பொதுச் செயலாளர், தாராபுரம் (தனி) – சத்தியபாமா, திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தவெகவினர் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத்தர வேண்டுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்​றுக் கொண்​டதையடுத்து அந்த தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேட்புமனு தாக்கல் செப்.9 (நேற்று) தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்.16 கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை செப்.17-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற செப்.19 கடைசி நாள். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.-9ம் தேதி எண்ணப்படுகிறது.

தவெக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வேட்புமனு தொடங்கிய நாளான நேற்று, திமுக இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா ஆகியோரை திமுக வேட்பாளர்களாக அறிவித்தது. இதில் பரந்தாமன் திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.

மூத்த வழக்கறிஞரான இவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது 2-வது முறையாக அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுகன்யாவும் வழக்கறிஞர். திமுகவில் மகளிரணி நிர்வாகியான இவருக்கு, இம்முறை தாராபுரம் தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு அளித்தது.

இதனைத் தொடர்ந்து தவெகவும் இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தவெக வேட்பாளர்கள் இருவருமே அத்தொகுதியில் வெற்றி பெற்று பின்னர் பதவியை ராஜினாமா செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this content:

You May Have Missed