தேவகோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொடூரமாக தாக்கி கொள்ளை முயற்சி
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொடூரமாக தாக்கிவிட்டு கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் தப்பின.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பாவனக்கோட்டையில் நாகாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு அடமானக் கடனுக்காக பெறப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் லாக்கரில் உள்ளன. இந்நிலையில், நேற்றிரவு காவல் பணியில் இருந்த பொன்னத்தியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதனை (65) ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. மயங்கிய அவரை புதருக்குள் தூக்கி வீசிய அந்தக் கும்பல் பின்னர் கதவின் பூட்டை உடைத்து கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் புகுந்து லாக்கர் இருந்த அறையின் கதவை உடைக்க முயன்றுள்ளனர்.
லாக்கரை உடைக்க முடியாததால் சுவரை டிரில்லர் மூலம் துளையிட முயன்றுள்ளனர். ஆனால் கான்கிரீட் சுவராக இருந்ததால் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டது. முயற்சி தோல்வி அடைந்தநிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, ஹார்ட்டிஸ்க்கை அந்தக் கும்பல் எடுத்துச் சென்றுள்ளது. சில மணி நேரத்தில் அப்பகுதியில் ரோந்து சென்ற வேலாயுதப்பட்டினம் எஸ்ஐ-யான மாணிக்கம் தலைமையிலான போலீஸார் கூட்டுறவு சங்கத்தில் இருந்த காவலாளியை தேடினர்.
அப்போது, முன் பகுதியில் இருந்த கேமரா உடைந்திருந்ததுடன் காவலாளியையும் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அப்பகுதியில் தேடியபோது புதருக்குள் காவலாளி மயங்கி நிலையில் கிடந்துள்ளார். போலீஸார் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
தொடர்ந்து தடயவில் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து மோப்ப நாய் பைரவி வரவழைக்கப்பட்டது. அது பேருந்து நிறுத்தம் வரை சென்று நின்றது. இச்சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் கடந்த மாதம் சிவகங்கை அருகே மதகுபட்டியில் ஒரு கும்பல் அடகு கடையின் சுவரை துளையிட்டு 300 பவுன் நகையைத் திருடிச் சென்றது. அதேபோல் மே மாதம் கீழக்கண்டனி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருட்டு முயற்சி நடந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகளை பிடிக்காத நிலையில் மற்றொரு கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மற்றும் போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share this content:
Post Comment