தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலின்போது பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி
புதுடெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்கள், யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது பாஜகவின் மத்தியத் தலைமை அலுவலகத்துக்குக் கிடைத்த மொத்த நன்கொடை ரூ.1,472.8 கோடி என தேர்தல் ஆணையத்திடம் பாஜக தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான பாஜக செலவின அறிக்கையை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய கடந்த மார்ச் 15, 2026 அன்று பாஜகவின் வங்கி இருப்புத் தொகை ரூ.6,722.6 கோடியாக இருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த மே 6, 2026-ல் அதன் வங்கி இருப்பு ரூ.7,627.2 கோடியாக உயர்ந்துள்ளது.
அசாமில் அதிகபட்ச செலவு: பாஜகவின் மத்தியத் தலைமை அலுவலகம், மாநில மற்றும் மாவட்ட அமைப்புகள் இணைந்து அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தல்களில் மொத்தம் ரூ.160 கோடியைச் செலவிட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் ரூ.96.3 கோடியும், தமிழகத்தில் ரூ.51.6 கோடியும், புதுச்சேரியில் ரூ.11.9 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
இதில் கட்சிப் பிரச்சாரத்துக்காக ரூ.130.4 கோடியும், விளம்பரங்களுக்காக ரூ.29.6 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.