சென்னைக்கு 101 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை
சென்னை: வெளிமாநிலத்தில் இருந்து சென்னைக்கு 101 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஜிபன் பிஸ்வாஸ் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பலராம் புஜாரி, சாஷி குமார்ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டுபிப்ரவரி 11-ம் தேதி இரு கார்களில் 101 கிலோ கஞ்சாவைகடத்தி வருவதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி மதுவிலக்கு போலீஸார் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா கடத்தி வந்த இரு கார்களையும் போலீஸார் மடக்கி கஞ்சாவையும், கார்களையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த ஜிபன் பிஸ்வாஸ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சென்னை 2-வது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.