இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 133 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி
பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பர்மிங்காமில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சவுத் ஷகீல் 47 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்தார். முகமது அப்பாஸ் 21, ரஸதுல்லா 11 ரன்கள் எடுத்தனர்.
சைம் அயூப் 0, அஸான் அவாய்ஸ் 9, அப்துல்லா ஷபிக் 3, ஷான் மசூத் 5, கேப்டன் பாபர் அஸம் 7, காஸி ஹோரி 4, முகமது இம்ரான் 5 ரன்களில் நடையை கட்டினர். முகமது அலி 5 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஷ் டங்க் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பறறினர். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 11, ஜோர்டான் காக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். எமிலியோ கே 6, கேப்டன் ஜோ ரூட் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.