அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: கால் இறுதி சுற்றில் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 10-வது நாளான நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரரருமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார்.
டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை அல்கராஸ் 7-6 (7-5) என கைப்பற்றினார். எனினும் அடுத்த 2 செட்களையும் அவர் 1-6, 3-6 என இழந்தார். தொடர்ந்து 4-வது செட்டில் மீண்டெழுந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ் 6-1 என தன்வசப்படுத்தினார். இதனால் கடைசி செட் பரபரப்பானது.
டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை அல்கராஸ் 6-7 (7-10) என இழந்தார். முடிவில் 4 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலில் கார்லோஸ் அல்கராஸ் 7-6 (7-5), 1-6, 3-6, 6-1, 6-7 (7-10) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்செஸ் தியாபோ, சகநாட்டைச் சேர்ந்த 46-ம் நிலை வீரரான அலெக்ஸ் மைக்கேல்சனை எதிர்கொண்டார். இதில் முதல் 2 செட்களையும் பிரான்செஸ் தியாபோ 5-7, 3-6 என இழந்தார். எனினும் அடுத்த 2 செட்களிலும் ஆக்ரோஷமாக செயல்பட்டு 7-5, 6-3 என தன்வசப்படுத்தினார் தியாபோ.
இதனால் வெற்றியை தீர்மானித்த கடைசி செட் ஆட்டம் பரபரப்பானது. டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை தியாபோ 7-6 (10-6) என கைப்பற்றினார். முடிவில் 4 மணி நேரம் 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்செஸ் தியாபோ 5-7, 3-6, 7-5, 6-3, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபன் தொடரில் தியாபோ அரை இறுதிக்கு முன்னேறுவது இது 3-வது முறையாகும். அவர், 2022 மற்றும் 2024-ம் ஆண்டு தொடர்களிலும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா, 6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார். இருவரும் சமபலத்துடன் மோதியதால் முதல் செட் டைபிரேக்கர் வரை சென்றது. எனினும் சபலென்கா கடுமையாக போராடி இந்த செட்டை 7-6 (7-1) என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த லின்டா நோஸ்கோவா 6-3 என தன்வசப்படுத்தினார்.
இதனால் வெற்றியை தீர்மானித்த 3-வது செட் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் சாதுரியமாக செயல்பட்ட அரினா சபலென்கா 7-6 (10-7) என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். முடிவில் சபலென்கா 7-6 (7-1), 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 26-ம் நிலை வீராங்கனையான எம்மா நவர்ரோவை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் நுழைந்தார்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவுக்கு எதிராக ஆக்ரோஷாக விளையாடிய முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா.