தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வங்கிக் கணக்கில் ரூ.5 கோடி ஆன்லைன் மோசடி!
அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பா? சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை
தாராபுரம்: தமிழக ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலம் முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வங்கிக் கணக்கில் இருந்து மட்டும் ரூ.5 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஓ.டி.பி. கடவுச்சொல் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் மற்றும் உதவி செயல் அலுவலர் நாகலிங்கம் ஆகியோரிடம் சென்னையில் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜுக்கு மருத்துவமனையில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. தற்போது அவர் மருத்துவ விடுப்பில் உள்ளார்.
ரூ.22.10 கோடி முறைகேட்டின் பின்னணி என்ன? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this content:



Post Comment