×

Highlight

நெல்லிக்குப்பத்தில் போலீஸாருடன் இளைஞர் மோதல்: வீடியோ வைரலானதால் பரபரப்பு!

இரு தரப்பு மோதலில் 3 போலீஸார் காயம் – 3 பேர் கைது; உரிய விசாரணை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்

கடலூர்:கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு, இரு தரப்பு ஆண்களிடையே மோதலாக மாறியது. இதுகுறித்து விசாரிக்கச் சென்ற போலீஸாரைத் தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வேலுமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தலைமைக்காவலர் அமிர்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, 3 பேரை விசாரணைக்காக காவல் ஜீப்பில் ஏற்ற முயன்றபோது, அவர்கள் போலீஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 3 போலீஸாரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக நெல்லிக்குப்பம் போலீஸார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, புகழ், ஜெகதீஷ், ஹரிஹரன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே, போலீஸார் முறையான விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுத்ததாகக் குற்றம்சாட்டி, உரிய விசாரணை கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், விசாரணைக்குச் சென்ற காவல் ஆய்வாளர் வேலுமணிக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவருக்கொருவர் சட்டையைப் பிடித்துக்கொண்டு மல்லுக்கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், காவல் ஆய்வாளர் இளைஞரின் சட்டையைப் பிடித்து இழுப்பதும், தனது சட்டையை விடுமாறு இளைஞர் கூறுவதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Share this content:

You May Have Missed