15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சாதனை
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி வேலு (35) என்பவர் கடந்த 22-ம் தேதி இரவு சாலை விபத்தில் தலை உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த 23-ம் தேதி அதிகாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார்.
உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததை தொடர்ந்து, மருத்துவர்கள் குழு அவரது உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உறுப்புகளை எடுத்தனர். இதயம் மற்றும் இரண்டு நுரையீரல் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக வழங்கப்பட்டது.
ஒரு சிறுநீரகம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. இரண்டு கண்கள் இருவருக்கு பொருத்துவதற்காக, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிக்சிசை பெறும் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது.
குறிப்பாக, 40 வயது பெண்ணுக்கு தானமாக பெறப்பட்ட கல்லீரலை பொருத்தியதன் மூலம் 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனை டீன் தேரணிராஜன் அறிவுறுத்தலின்படி சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை இயக்குநர் சுகுமார், மருத்துவர் பிரபாகரன், கல்லீரல் மருத்துவத்துறை இயக்குநர் கே.பிரேம்குமார், மயக்க மருத்துவர்கள் வெங்கடேஷ், கண்ணன், பிரித்விகா, பிரபு, தமிழ் செல்வன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் ரேலா மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கல்லீரல் மருத்துவத்துறை இயக்குநர் கே.பிரேம்குமார் கூறுகையில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது 11-வது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் தொடர் மருத்துவ கண்காணிப்புடன் நலமாக உள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் ரூ.35 லட்சம் வரை செலவாகும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
ஃபிபுலா எலும்புகள் தானம்: மூளைச்சாவு அடைந்த வேலுவிடம் இருந்து இரண்டு கால்களில் (முட்டிக்கும், கணுக்காலுக்கும் இடையில்) உள்ள ஃபிபுலா எலும்பு தானம் பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பயன்படுத்த ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எலும்பு முறிவு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் பா.பசுபதி கூறுகையில், “எலும்பு உடைதல், எலும்பில் புற்றுநோய் கட்டி ஏற்படுதல், எலும்பில் தொற்று பாதிப்பு உட்பட எங்கு எலும்பு இழப்பு ஏற்பட்டாலும், அதற்கு மாற்றாக ஃபிபுலா எலும்பை பயன்படுத்த முடியும். 2019-ம் ஆண்டு முதல் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து ஃபிபுலா எலும்பு தானம் பெறப்படுகிறது.
கரோனா தொற்று காலக்கட்டத்தில் தானம் பெற முடியவில்லை. இதுவரை 6 பேரிடம் இருந்து ஃபிபுலா எலும்பு தானம் பெறப்பட்டு, 12 பேருக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது, 7-வது நபரிடம் இருந்து தானமாக பெறப்பட்டுள்ள ஃபிபுலா எலும்பு தேவையானவர்களுக்கு பொருத்தப்படும். மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் உள்ள அனைத்து எலும்புகளையும் பயன்படுத்த முடியும். ஃபிபுலா எலும்பை எடுப்பதால் கால்களின் அமைப்பு மாறாது என்பதால் அதனை மட்டும் தானம் செய்கின்றனர். மூளைச்சாவு அடைந்தவர்களின் அனைத்து எலும்புகளையும் தானம் செய்தால், ஏராளமானோர் பயன்பெறுவார்கள்” என்றார்.
சிறுநீரக மாற்று சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1987-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இதுவரை 1,600-க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் நடந்ததை சேர்ந்து இந்த ஆண்டில் இதுவரை 26 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.
Share this content:
Post Comment