வேலை வாங்கி தருவதாக ரூ.3.5 கோடி மோசடி செய்தவர் மீது வழக்கு

தேனி: தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த சுருளிவேல் (38), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் (47) என்பவர் 2019-ல் பழக்கமானார்.

அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலரையும் தனக்குத் தெரியும் என்றும், அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். இதை நம்பி நான், எனது உறவினர்கள், நண்பர்கள் உட்பட 68 பேர் மொத்தம் ரூ.3.5 கோடியை அவரிடம் அளித்தோம்.

சில மாதங்களுக்குப் பின்பு நீதிமன்ற ஊழியராக பணியில் சேருவதற்கான நியமன ஆணைகளை நாகேந்திர குமார் வழங்கினார். ஆனால், அவை போலியானவை என்பது தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நாகேந்திர குமார் மற்றொரு மோசடி வழக்கில் விருதுநகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து, விசாரிக்க தேனி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed