ரூ.24.50 லட்சம் மோசடியில் மதுரையைச் சேர்ந்தவர் கைது

தேனி:திண்டுக்கல் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஏமாற்றி 52 பேரிடம் ரூ.24.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் மதுரை மாவட்டம் பொதும்புவை சேர்ந்த தனியரசை 50, தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பம் எல்.எப்., ரோடு பாலஸ்ரீனிவாசன் 52. இவரது அலைபேசி டெலிகிராம் குழுவில் முதலீடு செய்வது தொடர்பாக திண்டுக்கல் நிறுவனம் வெளியிட்டிருந்த தகவல் வந்தது.அதில், முதலீடு செய்தால் 150 நாட்களில் 2 மடங்கு பணம் லாபமாக கிடைக்கும் ‘என கூறப்பட்டு இருந்தது. அந்த அலைபேசி எண்ணுக்கு, பாலஸ்ரீனிவாசன் தொடர்பு கொண்டார். நிறுவன பிரதிநிதிகள் என சிலர் பேசினர். நிறுவன ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றார்.பின் தனது பெயரிலும் நண்பர்கள், உறவினர்கள் என 52 பேரின் பெயர்களில் பயனீட்டாளர் கணக்கு துவக்கி ரூ.24.50 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். லாபம் கிடைக்கவில்லை, முதலீடு செய்த பணமும் திரும்பிக் கிடைககவில்லை.தேனி எஸ்.பி.,யிடம் பாலஸ்ரீனிவாசன் கடந்தாண்டு புகார் அளித்தார்.எஸ்.பி., உத்தரவில் சைபர் கிரைம் போலீசார் நிறுவன இயக்குனர் செல்வராஜ், பங்குதாரர் டேனியல் சந்தோஷ், நிறுவனத்தில் பணியாற்றும் பிரகாஷ், தனியரசன், லதா, பாலமுருகன், பாலாஜி ஆகிய 7 பேர் மீது 2023 ஏப்ரலில் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ., தாமரைகண்ணன் தலைமையிலான போலீசார் செப்.7 ல் இயக்குனர் செல்வராஜை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், கோழி இறைச்சி கடையில் பணியாற்றி, பண மோசடிக்கு ஆட்களை சேர்த்ததாக மதுரை மாவட்டம் பொதும்புவைச் சேர்ந்த தனியரசுவை போலீசார் கைது செய்து, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed