Loading Now
ராமநாதபுரம்: ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல் ‘சாலையில் கிடந்தது’ என பரபரப்பு வாக்குமூலம்!

ராமநாதபுரம்: ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல் ‘சாலையில் கிடந்தது’ என பரபரப்பு வாக்குமூலம்!

ராமநாதபுரம், செப். 21
ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி தங்கம் மற்றும் பணத்துடன் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். இது கடத்தி வரப்பட்டதா, கொள்ளையடித்ததா அல்லது சாலையில் கிடந்ததா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். குடிசை மாற்று வாரியம் அருகே முடுக்குத் தரவை செல்லும் சாலையில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் நின்றிருந்தனர், உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.
உடனே 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதித்தபோது தங்கக்கட்டிகளும், தங்க நகைகளும், கட்டுக்கட்டாக பணமும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக விசாரித்தபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும், எம்.ஜி.ஆர். நகர் அருகே குப்பை கிடங்கு வழியாக நடந்து வந்தபோது அங்கு கேட்பாரற்று கிடந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் இந்த தங்கக்கட்டிகள், நகைகள், பணம் இருந்ததை பார்த்தோம். அவற்றை சமமாக பங்கிட்டு கொள்வதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத முடுக்குத்தரவை செல்லும் ரோட்டில் உள்ள இந்த பகுதிக்கு வந்ததாக கூறினர்.
தங்கம், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மொத்தம் 3 1/4 கிலோ எடை கொண்ட 38 தங்கக்கட்டிகள், 28 பவுன் நகைகள், ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பிடிபட்டு இருந்தது. அதாவது இந்த நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என தெரியவந்தது.
சிக்கியவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 45), செல்வராஜ் (62), பாலுகுட்டி என்ற சரவணன் (50), மாரிமுத்து (27), வேலாயுதம் (40) என்று தெரியவந்தது.
இந்த தங்கக்கட்டிகள், நகைகள், பணம் ஆகியவற்றை இவர்களுக்கு கொடுத்தது யார்? எங்கேயும் கொள்ளையடித்து வந்தார்களா? அல்லது கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் பையுடன் தூக்கி வீசிச்சென்றதில் சாலையில் கிடந்ததா? என்ற கோணங்களில் 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Share this content:

You May Have Missed