போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: “போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் தென்காசியில் மருத்துவமனை, மருந்தகம் நடத்தி வருகிறேன். கரோனா தொற்றுக் காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு எனது மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட சுகாதாரத் துறையினர் மருத்துவமனை சுத்தமாக இல்லை எனக் கூறி ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். ஆனால், மருத்துவமனை சுத்தமாகவே இருந்தது. இதனால் அபராதத்தைத் திரும்ப தர உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்தார். அரசு தரப்பில், “தமிழகத்தில் கரோனா தொற்றுக் காலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு மருத்துவமனைகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் அந்த மருத்துவமனைகளுக்கு ரூ.14.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையானது கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவருக்கும் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. எனவே, மனுதாரருக்கு அபராத தொகையை திரும்ப வழங்க இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, “மனுதாரர் தனது மருத்துவமனையை சுகாதாரமாக வைத்திருந்ததற்கான எந்த ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்தது சரியே. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர், எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசன் டிப்ளமோ சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். இந்தச் சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. இந்த விஷயம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இதுபோன்ற பட்டயப் படிப்பு சான்றிதழ்களை வைத்து, பொதுமக்கள் உயிருடன் விளையாடுகின்றனர்.
போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மனுதாரரின் மருத்துவமனையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் தகுதியானவர்களா என்பதை விசாரிக்க வேண்டும். அதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
Share this content:
Post Comment